Wednesday 15 April 2020

நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?

நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?



"100க்கு 97 பேராயுள்ள மக்களைக் கீழ் ஜாதி என்று கூறி அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதான் நமது சமதர்மக் கொள்கையும் முதல் விடுதலையுமாகும். நம் நாட்டில் தங்கம், செம்பு, பித்தளை, துணி முதலிய வியாபாரங்களிலும் வட்டிக்கடையிலும் வியாபாரத்தின் எல்லாத் துறைகளிலும் மார்வாரி, குஜராத்திகள், பனியாக்கள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொள்ளை லாபம் பெற்று நம்நாட்டுப் பணத்தை சுரண்டிக் கொண்டு போகிறார்களா இல்லையா? இதைத்தானே
 வெள்ளையன் செய்து வந்தான்? நம் நாட்டுப் பணமென்ன வெள்ளையன் கொண்டு போனால்தான் குறையுமா? வடநாட்டான் கொண்டு போனால் குறையாதா? இதைத் தடுக்க தற்போது வந்துள்ள சுதந்திரத்தில் திட்டமுண்டா? சுரண்டல் என்று வந்துவிட்டால் 5000 மைலுக்கப்பாலிருந்து வெள்ளையன் சுரண்டுவதும் 2000 மைலுக்கு அப்பாலிருந்து வடநாட்டான் சுரண்டுவதும் நம் பொக்கிஷத்தைப் பொறுத்த வரை ஒன்றுதானே? வெள்ளையனாவது துப்பாக்கி வெடிகுண்டுவைத்து நம்மை அடக்கிவந்தான். ஆனால் தோழர்களே! இந்த வடநாட்டுப் பார்ப்பனீயம், தேசியம் என்ற பித்தலாட்டத்தால் அறிவைக் கட்டுப்படுத்தி சுதந்திரத்தை அடக்கி ஆள்வது உண்மையா இல்லையா? கூறுங்கள் தோழர்களே!"

17-8-1947ல் அரூர் பொதுக்கூட்டத்தில் பெரியார் சொற்பொழிவு!

Wednesday 4 January 2017

*ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்*

                                 
எங்களது ஊர்ப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. 'மாடுமுட்டிப் பய' என்பார்கள். என்ன என்று பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், "மாடு நம்மை முட்ட வந்தால் புத்தியுள்ளவங்க என்ன பண்ணுவோம்... விலகி நிற்போம். ஆனா இவன் என்ன பண்ணுவான்னா மாட்டுக்குச் சமமா மல்லுக்கு நிப்பான். அந்தளவுக்கு புத்திகெட்ட பய..."

அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு. மனித அறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மேம்படாத காலத்தில் மாட்டை அடக்குவது அல்லது அணைத்து, வசப்படுத்துவது வீரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாட்டோடு மல்லுக்கு நிற்க எந்த அவசியமும் இல்லை. மாட்டை வசப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

மாட்டிற்கும், நமக்கும் என்ன பொருத்தம்? அதன் உருவ அளவு என்ன? நமது உருவ அளவு என்ன? அதன் கொம்புகள், வலுவான கால்கள் என்ன? நமது உடலமைப்பு என்ன? அதன் பலம் என்ன? நமது பலம் என்ன? அதோடு மோதி நமது பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?

உலக மல்யுத்தப் போட்டியில் விளையாடுபவர்கள் அவர்களது உடல் எடைக்கு இணையான உடல் எடை உள்ளவர்களோடு மட்டுமே மோத விடப்படுவார்கள். அவன் 51 கிலோ என்றால், இவனும் 51 கிலோ இருக்க வேண்டும். ஆனால், நமக்குக் கொஞ்சமும் பொருந்தாத மாட்டுடன் முட்டிக் கொண்டிருப்பதை 'வீர விளையாட்டு' என்று சொன்னால், அது பகுத்தறிவுள்ள செயலா? இதுதான் நமது பண்பாடு என்று சொன்னால் உலகம் நகைக்காதா?

நாட்டு மாடுகளும் ஜல்லிக்கட்டும்

ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் இன்னொரு வாதம் - 'ஜல்லிக்கட்டு இல்லை என்றால் நாட்டு மாடுகள் அழிந்து விடும்'

நான் சிறுவனாக இருந்தபோது, தாய்வழி தாத்தா வீட்டிலும், தந்தைவழி தாத்தா வீட்டிலும் தலா இரண்டு ஜோடி காளை மாடுகளும், நான்கு, ஐந்து பசு மாடுகளும் இருந்தன. அதோடு மாட்டு வண்டிகளும், கலப்பைகளும் இருந்தன. தாய்வழி தாத்தா வீட்டில்தான் நான் அதிகம் வளர்ந்தேன். அப்போது அந்த ஊரில் காளை மாடுகளும், பசு மாடுகளும் இல்லாத வீடுகளே மிகவும் குறைவு. தாத்தா மாடு மேய்க்கப் போகும்போது, நானும் உடன் சென்றதுண்டு.

டிராக்டர்கள் வரத் தொடங்கியதும், ஒவ்வொருவராக காளை மாடுகளை விற்கத் தொடங்கினார்கள். எனக்கு 12 வயதாகும்போது, எங்கள் வீட்டில் இருந்த காளை மாடுகளை தாத்தா விற்றுவிட்டார். பின்பு பசுமாடுகளின் எண்ணிக்கையும் குறைந்தது. பால் தேவைக்காக மட்டும் ஒரே ஒரு பசு மாடு இருந்தது. தாத்தா இறந்ததும், அந்த பசு மாடு வளர்ப்பும் நின்றுவிட்டது.

இப்போது அதே ஊரில் காளை மாடுகளே இல்லை என்றாகி விட்டது. தற்போது 35, 40 வயதைத் தாண்டிய, கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறிய மக்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெரும்பாலோனோர் கிராமங்களில் இதுதான் நிலைமை.

இதெல்லாம் ஜல்லிக்கட்டுக்குத் தடை வருவதற்கு முன்பே ஏற்பட்டுவிட்டது (மேலும் விவரங்களுக்குப் படிக்க - ‘நாட்டு மாடுகளின் அழிவு’ இனி மேல்தானா?). பயனில்லாதவற்றிற்கு செலவு செய்யுமளவிற்கு தமிழக விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. கலப்பையை உடைத்து, வீட்டுக்குத் தேவையான மரச் சாமான்கள் ஆக்கியதுபோல், மாடுகளை விற்று, அந்த ஆண்டு நட்டத்தை கொஞ்சம் ஈடு கட்டிக் கொண்டார்கள்.

உண்மையில் நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், அதற்கு செய்ய வேண்டியது ஆக்கப்பூர்வமான வேலைகள்தான். ஜல்லிக்கட்டு மூலம் காப்போம் என்பது நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை வெறும் 300க்குள் சுருக்கி விடும்.

மாடுகள் அழிந்து கொண்டிருந்த காலத்தில், அதுகுறித்து சூழலியலாளர்கள் தவிர வேறு யாரும் பேசவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேச ஏதாவது கைப்பொருள் வேண்டும் என்பதற்காக, இப்போது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கையில் எடுத்ததுதான், நாட்டு மாடுகள் குறித்த அக்கறை. இது தவறு எனில், 'ஜல்லிக்கட்டு மூலமாகத்தான் நாட்டு மாடுகள் காப்பாற்றப்படுகின்றன' என்று யாராவது 2009க்கு முன்பு பேசியிருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டவும்..

நாட்டு மாடுகளை எப்படிக் காப்பது?

நாட்டு மாடுகள் அழிவது குறித்து அக்கறை கொள்வோர்கள், ஜல்லிக்கட்டு இல்லாமலேயே அதைச் செய்ய முடியும்.

1. அவரவர்கள் வீடுகளில் நாட்டுக் காளைகளையும், நாட்டுப் பசுகளையும் வளர்ப்பதை யார் தடை செய்திருக்கிறார்கள்? இதனால் பால் உற்பத்தி அதிகரித்து, பால் விலையும் குறையும்; நாட்டு மாடுகளும் காப்பாற்றப்படும்.

2. நாட்டு மாடு ஆதரவாளர்கள் எல்லாம் மாட்டுக்கறி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்; தங்களது வீடுகளில் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்க வேண்டும். கோழிக்கறி, ஆட்டுக்கறி போல் மாட்டுக்கறிக்கும் அதிக தேவை இருந்தால், யாரும் கேட்காமலே மாடுகளை வளர்க்கத் தொடங்கி விடுவார்கள். எந்தவொரு விலங்கினமும் மனிதனின் தேவைக்குப் பயன்பட்டால் மட்டுமே, மனிதன் அதை வளர்ப்பான். மாட்டுக்கறிக்கான தேவையை தமிழர்கள் அதிகப்படுத்தினால், அயல்நாடுகளைப் போல் இங்கும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிடும்.

எனக்குத் தோன்றிய யோசனைகள் இவை. உண்மையில் நாட்டு மாடுகள் மீது அக்கறை உள்ளவர்கள் யோசித்தால், இன்னும் நிறைய வழிகள் பிறக்கும். மாடு முட்டித்தான் மாடு வளர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஜல்லிக்கட்டு மாடுகளின் மீதான செண்டிமெண்ட்

'பிள்ளை போல மாட்டை வளர்ப்பாங்க' என்று நெஞ்சுருக விக்கிரமன் சினிமா பாணியில் பலர் பேசுகிறார்கள். ஆனால், உண்மை அதுதானா?

கிராமத்தில் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகளை மற்றவர்கள் யாரும் அடிக்கக்கூட விடமாட்டார்கள். ஆனால், அவர்கள்தான் தங்கள் வீட்டிற்கு விருந்தாளிகள் வரும்போது, 'கோழியை அடி, ஆட்டை வெட்டு' என்பார்கள். அவர்களது நேசம், அவர்களது பயன்பாடு, தேவை சார்ந்தது. பயன்படும் வரை உழவு மாடு, பின்பு அடிமாடு என்பதுதான் அவர்கள் கணக்கு. இன்றைக்கு எல்லா கிராமங்களிலும் ஆடுகள், கோழிகள் இருக்கின்றன; ஆனால் காளை மாடுகள் மட்டும் இல்லை. இது ஏனென்று யோசித்தால், நான் சொல்ல வருவது இன்னும் கொஞ்சம் விளங்கும். ஒரு சிலருக்கு கால்நடைகள் மீது ஏற்படும் தனிப்பட்ட பிரியம் இதில் விதிவிலக்கு.

'ஜல்லிக்கட்டு என்பது மாட்டுக்கும் மனுஷனுக்குமான உறவு' என்றும் சொல்கிறார்கள். எந்தக் காலத்திலும் ஜல்லிக்கட்டில் அத்தகைய உறவு இருந்ததில்லை. உண்மையில் மாடு பிடிக்க வருபவர்களை குத்திக் கிழிக்கும் வகையில்தான் கொம்புகள் வளர்க்கப்படுகின்றன; கூர்மையாக சீவி விடப்படுகின்றன. சாராயம் கொடுத்தும், வாலைக் கடித்தும் அதற்கும் வெறி ஏற்றப்படுகிறது. மாடு வளர்ப்பவர்களின் ஒரே நோக்கம், 'மாடு பிடிபடக்கூடாது, எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை'.
மாடு பிடிப்பவர்களின் நோக்கம், 'மாட்டிற்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. அதைப் பிடிக்க வேண்டும்'.


ஒட்டுமொத்தமாக பத்து, பதினைந்து பேர் மாட்டின்மீது பாய்ந்து விழுவதிலும், மாட்டிடம் உதை வாங்குவதிலும், கொம்பு கிழித்து குடல் சரிவதிலும் என்ன உறவு பேணுதல் இருக்கிறது?

ஜல்லிக்கட்டை பெண்கள் ஆதரிப்பார்களா?

பெண்களைப் புறந்தள்ளிய, பெண்களின் பங்கேற்பு இல்லாத ஜல்லிக்கட்டை தமிழர்களின் ஒட்டுமொத்த பண்பாடு என்று எப்படிச் சொல்வது? பங்கேற்பை விடுங்கள்... ஒப்புதல் கிடைக்குமா? "தமிழ்ப் பண்பாட்டைக் காக்க நம் மகனை ஜல்லிக்கட்டுக்கு அனுப்பட்டுமா?" என்று வீட்டில் கேட்டுப் பாருங்கள்... என்ன பதில் கிடைக்கும்?

'ஜல்லிக்கட்டு நடத்தலாமா' என்று வாக்கெடுப்பு நடத்துங்கள்... இலட்சம் பேர் என்ன.. கோடிபேர் கூட ஆதரவு தெரிவிப்பார்கள். 'ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்க வருகிறீர்களா' என்று கேட்டுப் பாருங்கள்... தமிழ்நாடு முழுக்கத் தேடினாலும் பத்தாயிரம் பேர் கூட வர மாட்டார்கள்.
யாராவது மாடு முட்டி சாகட்டும்... நாம் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டு தமிழர் வீரம், தமிழர் பண்பாடு என்று பேசலாம். அப்படித்தானே?
“கடவுள் வேண்டாம் என்ற சொன்ன பெரியார், கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தவில்லையா?” என்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தோழர்கள் கேட்கிறார்கள். கோயில்களே வேண்டாம் என்பதுதான் பகுத்தறிவாளர்களின் இலட்சியம். அதே கோயிலுக்குள், கருவறைக்குள் நுழைய வேண்டும் என்று கேட்பது உரிமைக்கான போராட்டம். கடவுள் மறுப்பு, கருவறை நுழையும் போராட்டம் இரண்டையும் இணையாக பெரியாரியவாதிகள் செய்து வருகிறார்கள்.

கருவறைக்குள் செல்ல உரிமை கிடைத்தால், எங்கள் வீட்டினர் நாளை உள்ளே செல்வார்கள். நாளையே ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கினால், உங்களில் எத்தனை பேர் குடும்பத்துடன் மாடு பிடிக்கப் போவீர்கள்?
போட்டிகளை நடத்தத்தானே உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது; பயிற்சி நடத்தத் தடை இல்லையே! ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுப்பவர்கள், ஊருக்கு ஒரு காளை மாட்டை வாங்கி, அதனைப் பிடிப்பதற்குப் பயிற்சி எடுத்து, பண்பாட்டின் மீதான அக்கறையை நிரூபிக்கலாமே!

இதையெல்லாம் நீங்களும் செய்ய மாட்டீர்கள்; உங்கள் குழந்தைகளையும் அனுமதிக்க மாட்டீர்கள். உங்களுக்குத் தெரியும், பழகாத காளை மாடு முட்ட வரும்; உதைக்க வரும். வேறு யாரோ குத்துப்பட்டு செத்தால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழர் வீரம் என்றும், தமிழர் பண்பாடு என்றும் பழங்கதை பேசுவீர்கள்.

பார்ப்பனர்களுக்கு திராவிடம் துணை போகிறதா?

"PETA அமைப்பு மூலம் தமிழர் பண்பாட்டை பார்ப்பனர்கள் சிதைக்க முயல்கிறார்கள்; அவர்களின் முயற்சிக்கு பெரியாரியவாதிகள் துணை நிற்கலாமா?" என்ற கேள்வி ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

முதலில் ஒரு செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். PETA அமைப்பு கவலைப்படுவது மாடுகளுக்காக... பெரியாரியவாதிகள் கவலைப்படுவது மனிதர்களுக்காக... PETA அமைப்புக்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டுக்கு எதிராக பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், இடதுசாரிகள் பேசியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் சுப.வீரபாண்டியன் 'இடதுசாரித் தமிழ்த் தேசியம்' என்ற நூலில், தமிழர் பண்பாடு என்ற பெயரில் நிகழும் அவலங்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். வே.ஆனைமுத்து அய்யாவின் ‘சிந்தனையாளன்’ இதழில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தோழர் ஓவியா எழுதியிருக்கிறார். தலித் முரசு இதழ் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டில் நிலவும் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்து வந்திருக்கிறது. சேர்ந்து இயங்கிய போதும், தனித்து இயங்கியபோதும் தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன் இதை எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

இடதுசாரி எழுத்தாளர்களும், அமைப்புகளும் ஜல்லிக்கட்டில் நிலவும் நிலப்பிரபுத்துவக் கூறுகளை தொடர்ச்சியாக விமர்சித்து வந்திருக்கிறார்கள்.

கீற்று இணையதளத்திலோ, பிற இணையதளங்களிலோ தேடினால் இதற்கான தரவுகள் நிறைய கிடைக்கும்.

இன்று ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் முன்னர் பேசியது இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது என்பதினால்தான், பெரியாரியவாதிகள், இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள் இத்தடையை வரவேற்கிறார்கள். நாட்டு மாடுகளை வளர்க்கவே கூடாது என்ற தடை வந்தால், அதை எதிர்த்து இந்த அமைப்புகள் நிச்சயம் குரல் கொடுக்கும் என்பதில் எந்த அய்யமும் இல்லை.

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களும், ஜல்லிக்கட்டும்...
பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து இருக்கிறார் (https://goo.gl/16M3NJ & https://goo.gl/6VX8EE). அவரது கருத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. இது வேட்டைச் சமூகத்து வீர விளையாட்டு. பண்பாடு, பாரம்பரியம் சார்ந்தது.
வேட்டைச் சமூகத்தில் வாழ்ந்தது போலவா இப்போது வாழ்கிறோம்? எவ்வளவோ நாகரிகமடைந்து, வேட்டைச் சமூகத்தின் மூடப் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் விட்டொழித்த பின்பு, ஜல்லிக்கட்டு மட்டும் எதற்காக?

நவீன யுக்திகள் இல்லாத அன்றைய சமூகத்தில், காட்டு விலங்காக இருந்த மாட்டை வசமாக்குவதற்கும், அடுத்த தலைமுறைக்கு அதே பயிற்சியை அளிப்பதற்கும் இந்த விளையாட்டு பயன்பட்டு இருக்கலாம். ஆனால், இன்று மாடு, வீட்டு விலங்காகி விட்டது. வளர்ப்பவர்கள் பின்னே சாதுவாக வருகிறது. இன்றைக்கும் மாட்டோடு முட்டிக் கொண்டிருக்க வேண்டிய தேவை என்ன? உடல் எல்லாம் காயப்பட்டு, உயிரைக் கொடுக்க வேண்டியதற்கு அவசியம் என்ன? இதன்மூலம் இந்த உலகிற்கும், அடுத்த தலைமுறைக்கும் என்ன சொல்ல விழைகிறோம்? உலகிலேயே மாட்டை முதன் முதலில் வசப்படுத்தியவர்கள் நாம் என்றா?

பண்பாடு, பாரம்பரியம் என்பவை மயக்கத்தில் ஆழ்த்தும் சொற்கள். முன்னோர்கள் சொன்னார்கள், செய்தார்கள் என்பதற்காக எந்தக் கேள்வியுமின்றி, அவற்றைப் பின்தொடர வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

அன்றைக்கு சுடுகாட்டில் உடலைப் பற்ற வைப்பதற்கு வசதிகள் இருக்காது. அதற்காக பிணத்தை எடுத்துச் செல்லும்போது, வீட்டில் இருந்து கொள்ளிச்சட்டி எடுத்துச் சென்றார்கள். இன்றைக்கு மின்சார சுடுகாடு வந்தபின்பும், அதே மாதிரி சட்டியை சுமந்து செல்கிறானே, அது மடத்தனம் இல்லையா?

பண்பாடு, பாரம்பரியம், பழக்க வழக்கங்கள் என்று அன்றைக்குச் செய்தது, இன்றைக்கு ஒத்து வருகிறதா என்பதைப் பகுத்தறிவால் ஆராய்ந்து, கொள்வனவற்றைக் கொண்டு, அல்லாதவற்றை விட்டொழிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், ஜல்லிக்கட்டு இந்தக் காலத்திற்குத் தேவையில்லாத விபரீத விளையாட்டு.

2. ஜல்லிக்கட்டில் வன்முறை இல்லை. கூட்டத்தைப் பார்த்து மிரண்டு , கொம்பைப் பயன்படுத்துகிறது. காயப்படாத விளையாட்டு உண்டா? - ஆய்வாளர் தொ.பரமசிவன்

ஜல்லிக்கட்டில் எத்தனை பேர் ஆண்டுதோறும் இறந்தார்கள்? எத்தனை பேர் ஆண்மையை இழந்தார்கள்? எத்தனை பேர் படுகாயத்துக்கு உள்ளானார்கள்? இதெல்லாம் வன்முறை இல்லையா?

உச்ச நீதிமன்றம் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தபின்பும், இந்த வன்முறையின் அளவு குறையவில்லையே! மாட்டின் மீதான வன்முறை குறித்து நாம் அக்கறைப்படவில்லை. தமிழர்கள் மீது மாடு வளர்ப்பர்கள் செலுத்தும் வன்முறை குறித்துதான் கவலைப்படுகிறோம்; எதிர்க்கிறோம்.

"காயப்படாத விளையாட்டு இல்லையா, கிரிக்கெட்டில் உயிர் இழப்பு ஏற்படவில்லையா?" என்று பேராசிரியர் கேட்கிறார். ஆனால், அங்கு உயிரிழப்பு என்பது என்றைக்கோ ஒரு முறை நடக்கும் விதிவிலக்கான சம்பவம்; இங்கு என்றைக்கும் நடக்கும் தவறாத சம்பவம்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார். அப்படி செய்துவிட்டால், அணைக்க வருபவர்களுக்கு மாடு வளைந்து கொடுக்குமா? யாரையும் கொம்பால் குத்தவோ, காலால் உதைக்கவோ செய்யாதா? என்ன கருத்து இது?

வன்முறையே இல்லாமல், மிகவும் பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்றால், கொம்பில்லாத மாடுகளைப் பயன்படுத்த வேண்டும்; அந்த மாடுகளையும் – பொதி சுமக்கும் கழுதைகளைப் போல – கால்களைக் கட்ட வேண்டும். இதை ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் ஒத்துக் கொள்வார்களா?

3. ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் யாரும் மாட்டுக் கறி சாப்பிட மாட்டார்கள். - பேராசிரியர் தொ.பரமசிவன்

பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், இடதுசாரிகள் இதை எதிர்ப்பதற்கான காரணமும் இதுவேதான். தமிழ்ச் சமூகத்தில் மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் ஆதிக்க சாதியினர்; சாப்பிடுபவர்கள் தலித் மக்கள். அந்த தலித் மக்கள் யாரும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பது இல்லை என்பதைத் தான் பேராசிரியர் தொ.ப. மறைமுகமாகக் கூறுகிறார். தலித் மக்கள், பண்ணை ஊழியம் செய்யும் ஆதிக்க சாதியினர் வீடுகளில்தான் ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. தலித் மக்கள் அந்தப் பண்ணையில் உள்ள மற்ற மாடுகளை வளர்ப்பதுபோல் இவற்றையும் வளர்க்கிறார்கள். அதே மாடு இறந்தால், அதை அறுத்துச் சாப்பிடுவதும் தலித் மக்கள்தான்.

தான் வளர்க்கும் மாட்டை, தனது பண்ணையில் வேலை பார்க்கும் தலித் அடக்குவதற்கு ஆதிக்க சாதி முதலாளி அனுமதிப்பாரா?

இப்படி உழைக்கும் மக்களும், சரிபாதி பெண்களும் பங்கு பெறாத ஜல்லிக்கட்டு எப்படி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறாக முடியும்?

4. இது மாட்டை அடக்குவது அல்ல; மாட்டை அணைத்தல். - பேராசிரியர் தொ.பரமசிவன்

இதில் சோகம் என்னவென்றால், தங்களை கட்டி, அணைக்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்பது மாட்டிற்குத் தெரியாமல் போய்விடுவதுதான். விளைவு, மாடுபிடி வீரர்கள் கொம்பால் குத்துப்பட்டும், காலால் உதைபட்டும் கீழே விழுகிறார்கள்.

5. மாடு வனவிலங்கு கிடையாது; வீட்டு விலங்கு. - பேராசிரியர் தொ.பரமசிவன்

நமக்கும் இதில் மாற்றுக்கருத்து இல்லை. வீட்டு விலங்கை வசப்படுத்த, தவிடு, புண்ணாக்கு வைத்தால் போதும்; ஜல்லிக்கட்டு வேண்டாம்.

6. ஜல்லிக்கட்டில் மாடு துன்புறுத்தப்படுவது இல்லை. - பேராசிரியர் தொ.பரமசிவன்

மனிதர்கள் துன்புறுத்துப்படுவது குறித்துதான் நமக்குக் கவலை; மாடுகள் துன்புறுத்தப்படுவது குறித்து நமக்கு யாதொரு வருத்தமும் இல்லை. அது விலங்கு நல ஆர்வலர்களின் கவலை. தலித், முஸ்லிம் மக்களைப் போல, மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்று மாட்டுக்கறி திருவிழா, இயக்கம் நடத்துபவர்கள் நாம்.

7. இது மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விழா, திராவிடப் பண்பாடு. - பேராசிரியர் தொ.பரமசிவன்

மனிதர்களுக்கு வாழ்த்து சொல்வதையே மூடநம்பிக்கை என்பார் பெரியார். "வாழ்த்துவதால் நாம் கூடுதல் நாட்கள் வாழ்ந்து விடுவதும் இல்லை; பழிப்பதால் நமது வாழ்நாள் குறைந்து விடுவதும் இல்லை" என்று சொன்னவர் பகுத்தறிவுப் பகலவன் பெரியார். மனிதர்களுக்கே இந்நிலை எனும்போது, மாடுகளுக்கு நாம் நன்றி சொல்வதுகூடத் தெரியாது. ஆனாலும், பொங்கல், மாட்டுப் பொங்கல் பண்டிகைகளில் இருக்கும் இத்தகைய சடங்குகளை பெரியார் லேசான விமர்சனத்துடன் கடந்துவிடுகிறார். காரணம், இதில் நாம் இழப்பதுமில்லை; ஏமாற்றப்படுவதுமில்லை, பாதிக்கப்படுவதுமில்லை.

மாட்டுக்கு நன்றி சொல்வது மாட்டுப் பொங்கலோடு முடிந்துவிடும்போது, அதே மாட்டைத் துன்புறுத்தும் ஜல்லிக்கட்டு எதற்கு? முன்னரே சொன்னதுபோல், ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவது குறித்து நமக்கு எந்த வருத்தமும் இல்லை. தொ.ப. அவர்கள் சொல்லும் வாதத்தில் இருக்கும் முரணை சுட்டிக்காட்டத்தான் இதைக் குறிப்பிடுகிறேன்.

மேலும், ஜல்லிக்கட்டு எப்படி திராவிடப் பண்பாடு ஆகும்?

பெரியார் சொல்கிறார்:
"நாம் எல்லோரும் ஆறு அறிவு படைத்த மனிதர்கள்.ஆனால், காட்டுமிராண்டித் தன்மையிலேயே இருக்கின்றோம். அறிவு பெற்ற மக்களாக நடந்து கொள்ளவில்லை. உலகம் எவ்வளவோ முன்னேறியும், இன்னமும் பழமை என்னும் பெயரால் அதைப் பின்பற்றி, பின்னோக்கிக் காட்டுமிராண்டித் தன்மைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்."

பெரியார் சொல்வதைக் கருத்தில் கொண்டால், பழமை, பாரம்பரியம் என்பதைத் தவிர ஜல்லிக்கட்டில் என்ன இருக்கிறது? தற்கால உலகிற்குத் தேவைப்படாத இதுபோன்ற பழமைகளை நாம் அருங்காட்சியகத்திலும், ஓவியத்திலும், சிற்பத்திலும், இலக்கியத்திலும் வைத்து நினைவுகூரலாம். இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டுமானால், முன்னர் நடந்த ஜல்லிக்கட்டுக் காட்சிகளை பொங்கல் பண்டிகைகளின்போது அடுத்த தலைமுறைக்குப் போட்டுக்காட்டி, "முன்பு இப்படித்தான் இருந்தோம்; இப்போது பண்பாட்டில் இன்னும் செழுமை அடைந்து விட்டோம்" என்று சொல்லலாம்.ஆனால், இன்றும் ஜல்லிக்கட்டை நடத்தி, நாம் இன்னமும் அதே பழைய காலத்தில்தான்வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உலகிற்குப் பறை சாற்றத்தான் வேண்டுமா?
- கீற்று நந்தன்

Saturday 15 October 2016

உன்னை மிதிக்க சொன்னவனிடம் கேள்

மண்ணாங்கட்டி : தம்பி நீ பெரியாரை காலால் மிதித்தது மகிழ்ச்சி!
என்ன காரணத்திற்காக மத்திய மந்திரி - சங்கரச்சாரி சாமி காலு கிழே தரையில உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்.
இன்னொருத்தர் சங்கரச்சாரி சாமிக்கு சரி சமமா உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்???

என்ன காரணத்திற்காக பூனூல் போட்டவர் கடவுளுக்கு பூஜை செய்றார்
பூனூல் போடாதவங்க முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்றும் கடவுளுக்கு பூஜை செய்ற உரிமைக்காக போராடிகிட்டு இருக்காங்க???

எதுக்கு தாழ்த்தப்பட்ட இந்துக்கள் கோவில் தேர் இழுத்தா - வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் போன்ற சாதி இந்துக்கள் கோவில் தேர் இழுக்க விடாமல் கலவரம் செய்றாங்க???

எதுக்கு தாழ்த்தப்பட்ட இந்துக்கள் பிணத்தை பொது வழியில் எடுத்து சென்றால் - வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் போன்ற சாதி இந்துக்கள் பிணத்தை எடுத்து செல்ல விடாமல் கலவரம் செய்றாங்க???

இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்றீங்க - பிறகு எதுக்கு இந்து சாதிக்குள் காதலித்தால் தலையை வெட்டி தண்டவாளத்தில் போடுறாங்க???

தம்பி இதற்கெல்லாம் உன்னை மிதிக்க சொன்னவன் பதில் கொடுக்க மாட்டான்.

பெரியார் இடத்தில பதில் இருக்கிறது.

உனக்கு பதில் தெரிந்தால் - உன்னை மிதிக்க சொன்னவன் முகத்தில் காரி துப்புவாய்...

Monday 19 September 2016

இஸ்லாம் மதத்தை பற்றிய பெரியாரின் பார்வை

ஆதி திராவிடர்களை நான் இஸ்லாம் கொள்கைகையத் தழுவுங்கள்என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவு மில்லை. சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதி விட்டேன். ஏனெனில், ‘மோட்சம் அடைவதற்காகவென்று நான் ஆதி திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்ல வில்லை. அல்லது ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோநான் அப்படிச் சொல்லவில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றிப் பெறுவதும் சந்தேகம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதி திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டு மானால் எந்தவித மன மாறுதல்கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5.30 மணிக்கு தீண்டாதவன்என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆnக்ஷபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை.

கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய் கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின் றோம். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதி திராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்து போகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால், எது எப்படி யானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றும் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத்தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்ல வரவில்லை. பிரத்தியட்சத்தில் பறக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன். இங்குள்ள கிறிஸ்துவ சகோதரர்கள் கோவித்துக் கெள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப் படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷமே தான். அதுவும் பயன் அளிக்கவில்லை.
உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர்களையும், கிறிஸ்தவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவு படுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான். அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்த நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லா மானவன்) எந்தடா? பன்னிக் கூத்தச்சி மகனே! அவனைப் பார்க்கிறாய்என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாம் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.

ஆகவே இஸ்லாம் மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து மார்க்கம் செய்வதைவிட அதிகமா? இல்லையா? என்று பாருங்கள். ஆனால், நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன்.
- தந்தை பெரியார்.

02/ 08/ 1931 ‘குடிஅரசுஇதழில் வெளி வந்துள்ளது

2013 ஆண்டு, ஜீன் 18ஆம் தேதி "கீற்றில்" வெளியான கட்டுரை

நன்றி -  தோழர் ப. பார்த்திபன் 



Thursday 15 September 2016

‘பிள்ளையார் சுழி’ வந்த கதை !


பல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று - அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச்சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின்
மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும்இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் - முழுமுதற் கடவுள் என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது.


அப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்ளைாயர் தமிய்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே,இடையில் வந்த பிள்ளையார் - முதல் கடவுளாக எப்படி ஆனார்? அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது? அதனால் என்ன நன்மை? ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால்பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா?

அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் - பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும்.

கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. பொதுவாக எழுத்துக்களை எழுத வேண்டுமென்றால் நேர்க்கோடுகள் - வளைவுக் கோடுகள் சேர்ந்துதான் எழுத்து முழு வடிவம் பெறுகிறது. எனவே வளைவுக் கோடும் - நேர்க்கோடும் சரியாக எழுத ஓலையும் - எழுத்தாணியும்தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின்கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஓர் வளைவு கோடும் - ஓர் நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார். அது பிள்ளையார் சுழியும் அல்ல - பிள்ளையாரும் அல்ல. ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதிய காலத்தில் ‘உ’ என்ற தலைப்புக் குறி பயன்பட்டது. இப்பொழுதோ ஊற்றுப் பேனாவும், ‘பால் பாயின்ட்’ பேனாவும், பேப்பரும் வந்த பிறகும் ஏனோ அந்தச் சுழி!
- பெரியார் முழக்கம்.(01.09.2016.)

Tuesday 30 August 2016

மண்ணாங்கட்டி

மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?

பாதர் : கேளு மகனே

மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்படி படைத்தார் பாதர்?

பாதர் : நல்ல கேள்வி. சுருக்கமாக சொல்கிறேன் கேள் மகனே

முதல் நாள் - பகலையும், இரவையும் படைத்தார்

இரண்டாம் நாள் - வானத்தை படைத்தார்

முன்றாம் நாள் - பூமியில் புல், பூண்டு, மரம், செடிகளையும் படைத்தார்.

நான்காம் நாள் - பகலை ஆள பெரிய சுடரான சூரியனையும், இரவை ஆள சிறிய சுடரான சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார்

மண்ணாங்கட்டி : பாதர் நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க

பாதர் : என்னப்பா உன்னோட பிரச்சனை?
மண்ணாங்கட்டி : சூரியனை நான்காம் நாள் படைத்தார் என்று சொல்லுறீங்க பிறகு எப்படி சூரியன் இல்லாம முதல் நாள் பகல் வந்துச்சி?

பாதர் : உன்கிட்டே சாத்தான் இருக்கான். சண்டே சர்ச்சுக்கு வா. கொஞ்சம் ஜெபம் செய்தால் சரியா போயிடும்.

Thursday 18 August 2016

காதணி விழா நடத்துவது சரியா? காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே! - பெரியார் விளக்கம்

காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே! 

இதில் வந்து நான் கலந்து கொள்வது, இதன் மூலம் நம் கருத்தினைச் சொல்லலாம் என்பதற்காகத்தானே தவிர, இது சரியானது என்பதால் அல்ல. இக்காரியம் முட்டாள்தனமானது தான். கொஞ்சம் நாளானால் தானாகவே மறைந்து விடும். பல பழக்க வழக்கங்கள் நம்மிடையே மறைந்து போகவில்லையா, அதுபோன்று இதுவும் மறைந்து விடும்.


உண்மையான தத்துவம் தம் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களை ஆண்களுக்கு அடிமையாக்கப் பலவிதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவற்றில் ஒன்று தான் இந்தக் காது குத்துவதுமாகும். இந்த நகைகள் - ஓட்டைகள் எல்லாம் எதற்காக என்றால், கொஞ்சம் வலுவான பெண்கள் ஆண்கள் (தங்கள் கணவன்) அடிக்கும் போது எங்கே திருப்பி அடித்து விடுவார்களோ என்று, ஆண்கள் அவர்கள் திரும்ப அடிக்காமல் முதுகைக் காட்டும்படிச் செய்வதற்காகவே இவை யாவும், காதிலும், மூக்கிலும் ஓட்டையைப் போட்டு நகையை மாட்டினால் ஆண் அடிக்கப் போனால் பெண் தன் முகத்தையும், காதையும் பொத்திக் கொண்டு முதுகைக் காட்டுவாள். அதற்குத் தான் இந்த நகைகள் பயன்படுகின்றன. ரொம்ப பேர் எங்கள் பக்கங்களில் சம்மதிப்பது கிடையாது.



சாமி, குளம் இதெல்லாம் எதற்காக என்றால், நாம் கீழ்ஜாதி என்பதை உறுதிப்படுத்துவதேயாகும். நம் மக்கள் சமுதாயத்தில் ஒற்றுமையில்லாமல் பிரிந்து, பல ஜாதி, பல இனம், பல சமுதாயம், இனப்பற்று அற்று ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுக்கும் தன்மையில் இருப்பதால் இவற்றையெல்லாம் கண்டு நாம் சும்மா திரிகிறோமே, இந்தத் துறையில் பணியாற்றலாம் என்று கருதி, இதில் இறங்கினேன். எனது தொண்டு ஒன்றும் பயனற்றுப் போகவில்லை. ஓரளவு மக்களையாவது நம் பக்கம் திருப்பி இருக்கிறது. சமுதாயத்துறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தாய்மார்கள் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்க வேண்டும். நல்லவர்களோடு பழக விட வேண்டும். முன்பு உறை போட்டுக் கொண்டிருந்த துலுக்கப் பெண்கள் இப்போது பனியன்கள் போட்டு குஸ்திச் சண்டைக்கு வருகின்றார்கள். 



வெள்ளைக்காரப் பெண்களும் சமமாகப் பழகுகின்றனர். அதுபோல நம் பெண்களும் ஆண்களோடு எல்லா காரியங்களிலும் சரிநிகராகப் போட்டிப் போட வேண்டும். சமுதாயத்தில் பாதி அளவு இருக்கும் பெண்கள் தங்கள் அடிமைத் தன்மையால் சமுகத்திற்குப் பயன்படாமல் போய் விடுகின்றார்கள். அவர்கள் விடுதலை பெற்றால் தான் நம்நாடு முன்னேற்றமடைய முடியும். சமுதாயம் முன்னேற்றமடைய முடியும் என்பதால், நாங்கள் சமுதாயச் சீர்திருத்தம் செய்யக் கூடியவர்களானதால் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி மக்கள் திருந்த வேண்டுமென்று பாடுபடுகின்றோம்.


---------------------- 16-06-1968 அன்று அன்பரசி காதணி விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை"07-07-1968

நன்றி தமிழ் ஓவியா